வால்மார்ட் வந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று ஊடகங்கள் மற்றும் தாராளமயதாசர்களால் கொடிபிடிக்கப்படுகிறது. ‘சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால்தான் நாடு முன்னேற முடியும், நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க முடியும்’ என்று நாட்டை ஆளும் பணியை அன்னிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு போட்டி போடுகின்றனர் ஆளும் காங்கிரசு கட்சியும் அதை எதிர்ப்பது போல பாவனை செய்யும் பாரதீய ஜனதா கட்சியும்.
நமது நாட்டில் இப்போது செயல்படும் சில்லறை வணிக முறையில் எத்தகைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? அவற்றுக்கு அரசு ஆதரவு அல்லது மானியம் அல்லது நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்க்கலாம்?
சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில், பேருந்து ஓடும் சாலையிலிருந்து பிரிந்து போகும் தெருவில் இருக்கும் கடையை எடுத்துக் கொள்வோம். சுமார் 300 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் அமைந்திருக்கிறது அந்தக் மளிகைக் கடை. போட்டிக்கும் குறைவில்லாத சூழல். இரண்டு கடை தள்ளி மற்றொரு மளிகைக் கடை இருக்கிறது. இருநூறு மீட்டர் தொலைவில் இன்னொரு மளிகைக் கடையும் உண்டு. பிரிந்து போகும் கிளைத் தெருக்களில் சின்னச் சின்னதாக பல மளிகைக் கடைகள். மெயின் ரோட்டைத் தாண்டி மறுபகுதியில் மளிகைக்கடையாக இருந்து சூப்பர் மார்கெட்டாக மாறிய கடைகள், பிர்லா குழுமத்தின் மோர் சூப்பர் மார்கெட், ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் என்று கார்பொரேட் நிறுவன பேரங்காடிகள்.